செங்கல்பட்டு மாவட்டதைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மணிகண்டன், ஆன்லைன் லோன் ஆப் கும்பலின் கொடூர மிரட்டலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தனது அன்றாட தேவைகளுக்காக வெவ்வேறு செயலிகள் மூலம் சிறு சிறு தொகைகளை கடனாகப் பெற்ற மணிகண்டனிடம், அந்த ஆப் நிறுவனங்கள் பல மடங்கு கூடுதல் பணம் கேட்டுத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளன.

பணம் செலுத்தத் தாமதமானதால், மணிகண்டனின் போன் எண்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய அந்த கும்பல், அவரது புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளது. இந்த அவமானத்திற்குப் பயந்து கடுமையான மன உளைச்சலில் இருந்த மணிகண்டன், பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் “எல்லோருக்கும் Sorry” எனத் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த சிங்கப்பெருமாள் கோவில் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிகண்டனின் தந்தை கூறுகையில், “என் மகனுக்கு புகைபிடிக்கும் பழக்கமே கிடையாது, ஆனால் அவன் தொங்கிய அறையில் இரண்டு பீடி துண்டுகள் கிடந்தன. யாராவது உள்ளே வந்து அவனை மிரட்டினார்களா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்த வேண்டும்” எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மணிகண்டனின் செல்போனைக் கைப்பற்றிச் சைபர் கிரைம் உதவியுடன் மிரட்டல் விடுத்த லோன் ஆப் எண்கள் மற்றும் வங்கிச் கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அறையில் கண்டெடுக்கப்பட்ட பீடி துண்டுகள் குறித்தும் தடயவியல் துறை மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எவ்வளவு பெரிய நிதி நெருக்கடி மற்றும் மிரட்டல்கள் வந்தாலும் உயிரை மாய்ப்பது தீர்வாகாது என்று தெரிவித்துள்ள காவல்துறை, இது போன்ற சட்டவிரோத கடன் செயலிகளிடம் சிக்கி மிரட்டலுக்கு ஆளாகும் நபர்கள் உடனடியாக பயப்படாமல் 1930 என்ற சைபர் கிரைம் எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.