ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையை முதலீடாக மாற்றி, பொதுமக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதற்குச் சமூக வலைதளங்களில் வலம் வரும் ஒரு விநோதமான வீடியோ அண்மையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் பலரும் தங்களது ராசிக்குரிய அதிர்ஷ்டக் கற்களை மோதிரத்தில் பதித்து அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிரக தோஷங்களை நீக்கவும், நற்பலன்களைப் பெறவும் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து இந்தக் கற்களை வாங்குவோர் உண்டு. ஆனால், வாங்கிய கல் உண்மையானதா அல்லது போலியா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இந்த சந்தேகத்தைப் பயன்படுத்திக்கொண்டு சில வியாபாரிகள் அரங்கேற்றும் புதிய தந்திரம்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் பயனர் ராகேஷ் குமார் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வைரல் வீடியோவில், ஒரு நபர் ராசிக்கற்களைச் பரிசோதிக்கும் மர்மமான முறை ஒன்றைக் காட்டுகிறார். அந்த நபர் முதலில் ஒரு சிறிய கிண்ணத்தின் அடியில் ஒரு சிறிய துளையை ஏற்படுத்துகிறார். பின்னர், வாடிக்கையாளர்களை அந்தத் துளையின் வழியே தங்களது விரலை உள்ளே வைக்குமாறு கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து, அந்த கிண்ணத்தின் உள்ளே பல்வேறு கற்களை வரிசையாக மாற்றி மாற்றி வைக்கிறார். இதில் வியப்பு என்னவென்றால், பல கற்களை மாற்றினாலும் எந்தவிதச் சத்தமும் வராது; ஆனால் ஒரு குறிப்பிட்ட கல்லை மட்டும் அந்த கிண்ணத்தில் வைக்கும்போது மாத்திரம் ஒரு தனித்துவமான சத்தம் கேட்கிறது. உடனே அந்த நபர், “இதுதான் உமக்குரிய உண்மையான கல்” என்று அடித்துக் கூறுகிறார்.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது ஏதோ ஆன்மீகச் சக்தி அல்லது அதிநவீன அறிவியல் பரிசோதனை போலத் தோன்றலாம். ஆனால், இதைப் பார்த்த விழிப்புணர்வுள்ள நெட்டிசன்கள் பலரும் இது ஒரு அப்பட்டமான ‘ஸ்கேம்’ என்று சாடியுள்ளனர்.
அந்த நபர் தனது கையில் காந்தத்தையோ அல்லது வேறு ஏதேனும் ரகசியப் பொருளையோ மறைத்து வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட கல் கிண்ணத்தில் படும்போது லேசாக உரசி இந்தச் சத்தத்தை உண்டாக்குவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அறிவியலின் பெயரால் மக்களை நம்பவைத்து பணம் பறிக்கும் இந்த நவீன மோசடி முறை தற்போது இணையத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
