பீகாரில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள், காதலித்து வீட்டை விட்டு ஓடிச் சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தை சி.ஐ.டி  அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், கோவிலில் திருமணம் செய்து கொண்ட பிறகு தங்களது கைச்செலவுக்காக வைத்திருந்த ரூ.3,500 பணத்தைக் கொண்டு ஹோட்டலில் தங்கியுள்ளனர். மாணவிகளைக் காணாமல் பதறிப்போன குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட இரு மாணவிகளும் காவல்துறையினரின் விசாரணையில், “நாங்கள் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம், இனி எப்போதும் பிரிய மாட்டோம்; குடும்பத்தினருடன் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லை” என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

விசாரணையில் இருவரில் ஒருவர் 18 வயது நிரம்பியவர் என்றும், மற்றொருவர் மைனர் சிறுமி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மைனர் சிறுமியைப் பாதுகாப்பு கருதி சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது. அதேவேளையில், வயது வந்த மற்றொரு மாணவி தனது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கும் செல்வதற்கும் முழு சுதந்திரம் வழங்கித் தீர்ப்பளித்தது.