அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கீழ்நிலை ஊழியர்களின் சிறு பிழைகளுக்கும், ஆவணப் பராமரிப்பில் ஏற்படும் அலட்சியங்களுக்கும் அவர்கள் செலுத்தும் விலை சில நேரங்களில் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே நிலைகுலையச் செய்து விடுகிறது.
அந்த வகையில், மகாராஷ்டிராவில் ஆசிரியர் ஒருவர் சமர்ப்பித்த மருத்துவக் கட்டண பில் அரசு அலுவலகத்தில் காணாமல் போனதால், அந்தப் பழியில் இருந்து தப்பிக்கவும் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரவும் பெண் ஊழியர் ஒருவர் தனது தங்கத் தாலிச் சங்கிலியை அடகு வைத்து ரூ.30,000 பணத்தை அந்த ஆசிரியருக்கு வழங்கிய பரிதாபச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தனது மருத்துவச் செலவுகளுக்கான தொகையைப் பெறுவதற்காக முறைப்படி ஆவணங்களைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த பில்கள் அலுவலகத்தில் தொலைந்துபோனதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர், தன் பணத்தைப் பெற முடியாமல் போன ஆத்திரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதனால் எழுந்த நெருக்கடியைத் தாங்க முடியாமலும், தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அந்த ஏழைப் பெண் ஊழியர் வேறு வழியின்றித் தனது கழுத்தில் இருந்த தங்க நகையை அடகு வைத்துப் பணத்தை முழுமையாக ஆசிரியரிடம் கொடுத்து பிரச்சனையை முடிக்க முயன்றுள்ளார்.
இந்நிலையில் தன் பணத்தைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர், மனிதநேய அடிப்படையில் அந்தப் பெண் ஊழியர் மீது தான் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்ட போதிலும், இந்த விவகாரம் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரமால் இழுபறி நிலையிலேயே நீடித்து வருகிறது.
பெண் ஊழியர் தன் சொந்த நகையை அடகு வைத்துப் பணத்தைக் கொடுத்த பிறகும், நிர்வாக ரீதியிலான விசாரணைகளும் சிக்கல்களும் முடியாதது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓர் ஆவணம் தொலைந்ததற்காக ஏழைப் பெண் ஊழியரை இந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அரசுத் துறையின் நடவடிக்கை கண்டித்தக்கது என்றும், அவருக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
