உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 18 வயது இளம்பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்துள்ளனர். அந்தப் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு கதறும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உலா  கிராமம் ஒன்றில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, “அவரது தாய் குட்கா வாங்கி வரச் சொன்னதாகக் கூறி ‘சோட்டா’ என்பவன் அவரை அழைத்துச் சென்றுள்ளான். வழியில் ‘விஷால்’ மற்றும் ‘ஆகாஷ்’ ஆகிய இருவருடன் சேர்ந்து அப்பெண்ணை வழிமறித்துள்ளனர். அதில் ஆகாஷ் அப்பெண்ணை அருகில் இருந்த வயல்வெளிக்கு அழைத்துச் செல்ல, சோட்டா அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனை விஷால் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளான்” என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே கூறினால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக அவர்கள் மிரட்டியதால், பயந்துபோன அப்பெண் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, குற்றவாளிகள் இந்த கொடூரச் செயலைச் செய்துவிட்டுச் சிரித்துப் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 19 அன்று விரைந்து செயல்பட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டறிந்து புகாரைப் பெற்றது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சோட்டா மற்றும் விஷால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோவில் தொடர்புடைய மற்ற நபர்களின் பங்கு குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.