மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள நீலகண்ட் சொசைட்டி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக அங்குள்ள ஒரு குறிப்பிட்ட பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அந்த வீட்டின் உரிமையாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பே வீட்டின் உரிமையாளருக்கு வந்த அந்த ஒரு குறுஞ்செய்தி அவரை உரைய வைத்தது.

வீட்டின் உரிமையாளரின் போனுக்கு வந்த அந்த வாய்ஸ் மெசேஜில், “வீட்டு பாத்ரூமில் தண்ணீர் குழாய் திறந்துதான் கிடக்கிறது, அங்கேயே ஒரு சடலமும் கிடக்கிறது!” என்று ஒரு பெண் குரல் மிகவும் சாதாரணமாகப் பேசி இருந்தது. இதைக் கேட்டு உறைந்துபோன வீட்டின் உரிமையாளர், தாமதிக்காமல் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவலர்கள், பூட்டிக்கிடந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஒட்டுமொத்தக் காவல்துறையினருமே அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்த வீட்டின் கழிப்பறைக்குள் ஒரு சந்தேகத்திற்குரிய மூட்டை கிடந்தது. அதைப்பிரித்து பார்த்தபோது, அழுகிய நிலையில் ஒரு ஆணின் சடலம் சாக்கு மூட்டையினுள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அங்கு தங்கியிருந்த பெண் தனது காதலனை கூர்மையான ஆயுதத்தால் தலையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு, சடலத்தை சாக்கில் அடைத்து பாத்ரூமில் போட்டுள்ளது தெரியவந்தது. ரத்தக் கறைகளைக் கழுவி ஆதாரங்களை அழிப்பதற்காகவும், சடலம் சீக்கிரமாக அழுக வேண்டும் என்பதற்காகவும் பாத்ரூம் குழாயைத் திறந்துவிட்டுச் சென்றுள்ளார் அந்தப் பெண்.

தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து சான்றுகளைச் சேகரித்துள்ள நிலையில்,  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலையைச் செய்துவிட்டு கொல்கத்தாவுக்குத் தப்பி ஓடியதாகக் கருதப்படும் அந்தப் பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கொல்கத்தா விரைந்துள்ளனர். காதலனைக் கொன்றதற்கான காரணம் என்ன என்பது குறித்தும், பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.