மழைக்காலம் வந்துவிட்டாலே சந்தைகளில் பச்சைப் பசேல் என கீரைகளும் கொத்தமல்லித் தழைகளும் குவிந்து கிடக்கத் தொடங்கும். குழம்பு முதல் ரசம் வரை கொத்தமல்லி இல்லாத சமையலே நம் வீடுகளில் இருக்காது. ஆனால், இப்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, நீங்கள் அடுத்த முறை கொத்தமல்லி வாங்கும் போது நிச்சயம் உங்கள் கைகளை நடுங்க வைக்கும்.
பொதுவாக, மழைக்காலத்தில் நிலவும் குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான சூழல் காரணமாக பாம்புகள், தேள்கள் போன்ற ஊர்வன தங்களுக்குப் பாதுகாப்பான இடங்களைத் தேடி அலையும். அப்படிப்பட்டவை பெரும்பாலும் புதர்கள் அல்லது சந்தைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஈரமான கீரை, கொத்தமல்லி கட்டுகளுக்குள் எளிதாக புகுந்து கொள்ளும். அப்படியொரு பகீர் சம்பவம் தான் கடந்த ஆண்டு இணையத்தை உலுக்கியது. தற்போது மழைக்காலம் என்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அந்த அச்சுறுத்தும் வீடியோவில், ஒரு வாலிபர் சாலையோரம் விற்கப்படும் கொத்தமல்லி கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து நகர்த்திக் கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு எல்லாம் சாதாரணமாகத்தான் தெரிகிறது. ஆனால், அவர் கடைசி கொத்தமல்லி கட்டை கையில் தூக்கிய அந்த நொடி… அதற்கு அடியில் சுருண்டு படுத்திருந்த ஒரு குட்டிப் பாம்பு மின்னல் வேகத்தில் சீறிக்கொண்டு வெளியே பாய்கிறது! எதிர்பாராத இந்த ஆபத்தைக் கண்டு அங்கிருந்தவர்களின் அடியே வயிறு கலங்கிப் போனது. அந்தப் பாம்பின் அசுர வேகத்தைப் பார்த்தால் யாருக்குமே அங்கம் பதறும்.
இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், இதைப் பார்த்த நெட்டிசன்கள் “இனிமேல் கொத்தமல்லி வாங்கும் போது 10 தடவை செக் பண்ணனும்ப்பா” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து எச்சரிக்கும் நிபுணர்கள், “காய்கறிகளையோ கீரைகளையோ வீட்டிற்குள் கொண்டு வந்ததும், அவசர அவசரமாக நறுக்கக் கூடாது. ஒவ்வொரு கட்டையும் தனித்தனியாகப் பிரித்து, நன்கு உதறிப் பார்க்க வேண்டும். ஒருவேளை பாம்பு போன்ற ஆபத்தான உயிரினங்கள் இருந்தால், அதைத் நீங்களாகவே அடிக்கவோ பிடிக்கவோ முயலாமல், உடனடியாகப் பாம்பு பிடிப்பவர்களுக்கோ அல்லது வனத்துறையினருக்கோ தகவல் கொடுப்பதே புத்திசாலித்தனம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.
