டெல்லி ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’  என்ற அமைப்பின் சார்பில் நீட்-யுஜி  தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைப்பில் உள்ள குளறுபடிகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில் இளைஞர்கள் நடத்தி வரும் இப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், பறக்கும் ஒரு விமானத்தின் நடுவே பயணி ஒருவர் சக பயணிகளிடம் ஆற்றிய  உரை சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அக்ஷய் சோனாவனே என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், நடுவானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் வழிநடைப் பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென எழுந்து நிற்கிறார். மிகவும் பணிவான குரலில், சக பயணிகளிடம் சில நிமிடங்கள் தனது பேச்சைக் கேட்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். டெல்லியில் நடைபெறும் காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்பதற்காகவே சிறப்புப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அவர் முதலில் தனது நன்றியைத் தெரிவிக்கிறார். மேலும், டெல்லிக்கு வரும் போராட்டக்காரர்களுக்குத் தங்கும் இடம், உணவு அல்லது போக்குவரத்து வசதிகளில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், தானும் தனது நண்பர்களும் அவர்களுக்கு முழு உதவி செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளிக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hindi Khabar (@hindikhabarlive)

தொடர்ந்து பேசிய அவர், தனிப்பட்ட பணிகளுக்காகவோ அல்லது அலுவலக வேலைகளுக்காகவோ டெல்லி செல்லும் மற்ற பயணிகளிடமும் ஒரு அன்பான கோரிக்கையை முன்வைக்கிறார். டெல்லியில் அவர்களுக்குச் சிறிது நேரம் கிடைத்தாலும், ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து இந்த அமைதியான போராட்டத்திற்கு நேரில் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். தனது உரையின் முடிவில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி முழக்கமிட்ட அந்த இளைஞரின் வீடியோவில், “நீங்கள் உங்கள் நாட்டிற்காகப் பேசும்போது, எந்தவொ

ரு சமூகப் பயமும்  உங்களிடம் இருக்காது” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த இளைஞரின் தைரியத்தையும், கண்ணியமான முறையில் தனது கருத்தைப் பதிவு செய்த விதத்தையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். “பயமின்றி நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்த உங்கள் துணிச்சலுக்கு எங்களது சல்யூட்” என்றும், “மிகவும் அமைதியான முறையில் தனது கோரிக்கையை முன்வைத்தது பாராட்டுக்குரியது” என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.