பெண்களின் பாதுகாப்பு குறித்து எவ்வளவுதான் சட்டங்களும் விழிப்புணர்வுகளும் வந்தாலும், நள்ளிரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரும் அச்சுறுத்தல்கள் தொடர்கதையாகவே உள்ளன. ஹைதராபாத்தில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் காரிலேயே நள்ளிரவுப் பணிக்குச் சென்ற இண்டிகோ விமான நிறுவனப் பெண் ஊழியர் ஒருவருக்கு, அந்த காரின் ஓட்டுநரே எமனாக மாறிய அதிர்ச்சிச் சம்பவம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், இண்டிகோ விமான நிறுவனத்தில் கேபின் க்ரூ பிரிவில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவு ஷிப்ட் வேலைக்காக, நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் அவர் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டார். காரை தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான எர்ரபோகு பிரசாந்த் என்ற இளைஞன் ஓட்டிச் சென்றான். வழக்கமான பாதையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென விமான நிலையத்திற்கு அருகில் ஆள் நடமாட்டமில்லாத, கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு பாழடைந்த பகுதியை நோக்கித் திரும்பியது.
காரில் இருந்த பெண் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்வதற்குள், ஓட்டுநர் பிரசாந்த் வண்டியை ஒரு இருட்டான இடத்தில் நிறுத்திக் கீயைப் பூட்டினான். “இயற்கை உபாதை கழிக்க வேண்டும்” என்று பொய்யான காரணத்தைக் கூறிவிட்டு, திடீரென அந்தப் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்தாலும், அந்தப் பெண் தைரியத்தை இழக்கவில்லை. அவனிடமிருந்து தப்பிக்கக் கடுமையாகப் போராடி, காரில் இருந்து கீழே குதித்து இருட்டில் ஓடித் தப்பினார். பெண் தப்பித்து ஓடியதால் பயந்துபோன ஓட்டுநர் பிரசாந்த், உடனடியாக காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினான்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய அந்தப் பெண், உடனடியாக காவல் நிலையத்தை அணுகி நடந்த கொடுமையைக் கண்ணீருடன் விவரித்துப் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட சர்வதேச விமான நிலையப் போலீஸார், தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஓட்டுநர் பிரசாந்தைக் கைது செய்தனர். அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த விசித்திரமான மற்றும் கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேலைக்கு வரும் ஊழியர்களின் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அவசரமாக மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
