பணம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு கருவி மட்டுமே. ஆனால், அதே பணம் கையில் இல்லாதபோது ஏற்படும் கடன் சுமை, ஒரு மனிதனை எவ்வளவு பெரிய விபரீத முடிவுக்குத் தள்ளும் என்பதற்குச் சான்றாக கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பிஞ்சு மகள்களைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மைசூரு மாவட்டம் ஹுன்சூர் நகரில் வசித்து வந்த 42 வயதான ஹரிஷ் என்ற தொழிலதிபர், ரியல் எஸ்டேட் மற்றும் சில தொழில்களைச் செய்து வந்தார். இவருக்கு நிஷ்சிதா (34) என்ற மனைவியும், நிக்‌ஷா (12), ரக்‌ஷா (8) என்ற இரு மகள்களும் இருந்தனர். சம்பவத்தன்று இவர்களது வீட்டில் இருந்து எந்தச் சத்தமும் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உள்ளே சென்று பார்த்த போலீஸாருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. அந்த வீட்டில் நான்கு பேரும் சடலங்களாகக் கிடந்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், ஹரிஷ் தனது தொழிலில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது. சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, தன்னுடன் வசித்து வந்த வயதான தாயாரை யாரிடமும் சொல்லாமல் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் ஹரிஷ். அதன் பிறகு, நள்ளிரவில் தனது மனைவி மற்றும் இரு மகள்களின் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளைப் பிளாஸ்திரால் ஒட்டி, அவர்கள் மூச்சு திணறித் துடிதுடிக்கக் கொலை செய்துள்ளார். அவர்கள் இறந்ததை உறுதி செய்த பின், வீட்டின் முதல் மாடிக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன் ஹரிஷ் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், “நான் முதல் மாடியில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பேன். சொத்துப் பத்திரங்கள் அனைத்தும் லாக்கரில் உள்ளன. அதன் சாவி இந்த இடத்தில் இருக்கிறது. இதனை இதில் குறிப்பிட்டுள்ள நபரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று மிகத் தெளிவாக எழுதியுள்ளார். ஹரிஷின் தாயாரிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர்களுக்கு அதிக அளவில் கடன் சுமை இருந்தது உண்மைதான் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட பண நெருக்கடி மட்டும்தான் காரணமா அல்லது குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததா என்ற கோணத்தில் மைசூரு எஸ்பி மல்லிகார்ஜுன் பால்தண்டி தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.