சினிமாக்களில் மட்டுமே வரும் திருட்டு மற்றும் சேஸிங் காட்சிகளைத் தோற்கடிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஓடும் அரசுப் பேருந்தைக் கடத்திச் சென்ற திருடன் ஒருவனை, போலீஸார் 18 கிலோமீட்டர் தூரம் விரட்டிப் பிடித்த அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரீம்நகர் மாவட்டம் கோருட்லா பகுதியில் உள்ள மாடல் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக,  அரசுப் பேருந்து வழக்கம்போல வந்து கொண்டிருந்தது. மதியம் 3.55 மணியளவில், ஓட்டுநர் பிரவீன் பேருந்தை பேருந்து நிலையத்தில் நிறுத்தினார். நடத்துனர் கங்காதரனுடன் சேர்ந்து அவர் சற்று நேர ஓய்வுக்காகப் பேருந்தை விட்டு வெளியே சென்றார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. பேருந்தில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட ஒரு மர்ம நபர், சட்டென்று உள்ளே ஏறி, பேருந்தை ஸ்டார்ட் செய்து மின்னல் வேகத்தில் ஓட்டத் தொடங்கினார். பேருந்து கடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆர்.டி.சி ஊழியர்கள், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்த அடுத்த நிமிடமே போலீஸாரும், ஆர்.டி.சி ஊழியர்களும் தங்களது வாகனங்களில் அந்தப் பேருந்தைத் துரத்தத் தொடங்கினர். ஆனால், பேருந்தை ஓட்டிய திருடனோ தப்பிக்கும் வெறியில் பேருந்தை அசுர வேகத்தில் இயக்கினான். வழியில் சாலையோரம் சென்ற மூன்று இருசக்கர வாகனங்கள் மீது பேருந்தைக் கொண்டு போய் மோதினான். இதில் சில வாகன ஓட்டிகள் பலத்த காயமடைந்தனர். ஒருகட்டத்தில், தன்னைத் துரத்தி வந்த போலீஸ் வாகனத்தின் மீதே பேருந்தை மோதி சேதப்படுத்தினான்.  ஒரு தனியார் பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் ஏறிக்கொண்டிருந்தபோது, இந்த அரசுப் பேருந்து அதன் மிக அருகில் தாறுமாறாகக் கடந்து சென்றது. நல்ல வேளையாக, மாணவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

சினிமா பாணி சேஸிங் நீடித்துக் கொண்டே சென்றதால், போலீஸார் சமயோசிதமாகச் செயல்பட்டு வேறு ஸ்டேஷன் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களை குறுக்கே நிறுத்தி, பேருந்து செல்ல முடியாதபடி ஒரு பெரிய தடையை ஏற்படுத்தினர். தப்பிச் செல்ல வேறு வழியில்லாததை உணர்ந்த அந்தத் திருடன், பேருந்தை சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரத்தின் மீது பலமாக மோதி நிறுத்தினான். வண்டியிலிருந்து குதித்து அவன் ஓட முயன்றபோது, சுற்றி வளைத்த போலீஸார் அவனைத் தூக்கிக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே சில மணி நேரம் போர்க்களம் போலக் காட்சியளித்தது.