விபத்துகள் எப்போது, எப்படி வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்த சண்டையில், 11 வயது சிறுவன் ஒருவன் கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. சிந்து மண்டல் என்பவரின் 11 வயது மகன் சுபம் குமார், தனது தாயாருடன் மருந்து வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான். மருந்து வாங்கி முடித்ததும், சுபமின் மாமா அவனுக்குப் பலகாரம் வாங்கிக் கொடுப்பதற்காக அங்குள்ள அமன் சா என்ற பலகாரக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் கடையில் நின்றிருந்த அந்தச் சமயத்தில்தான் விதி விளையாடியது.

கடையில் இருந்த சிலருக்கு இடையே திடீரென ஏதோ ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டு, அது பயங்கர அடிதடியாக மாறியது. சண்டை உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் அங்கிருந்த பெரிய இரும்பு கரண்டி கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் சட்டியில் பலமாகப் பட்டது. இதனால் கொதிக்கும் எண்ணெய் சிதறி, அருகில் நின்றிருந்த சிறுவன் சுபமின் மீது விழுந்தது. எண்ணெய்யின் கடுமையான எரிச்சலாலும், திடீரென ஏற்பட்ட பயத்தாலும் நிலைதடுமாறிய அந்தச் சிறுவன், நேராகக் கொதித்துக் கொண்டிருந்த பெரிய எண்ணெய் கொப்பரைக்குள்ளேயே விழுந்தான்.

சுபம் எண்ணெய்க்குள் விழுந்ததும் அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். ஆனால், ஹோட்டல் உரிமையாளரோ அல்லது அங்கிருந்த மற்றவர்களோ அந்தப் பிஞ்சு குழந்தையைக் காப்பாற்ற ஒரு துளி கூட முயற்சி செய்யவில்லை என்று குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டுகின்றனர். இறுதியாக, சுபமின் மாமா தனது சொந்த உயிரையும் பொருட்படுத்தாமல் கொதிக்கும் எண்ணெய்க்குள் கையை விட்டுச் சிறுவனை வெளியே தூக்கினார்.

உடல் முழுவதும் மோசமாக வெந்த நிலையில், சுபம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் சண்டையிட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.