தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காகப் பாடுபட்டு, பல நன்மைகளைத் தனக்கெனத் துறந்த தந்தைக்கு, மகன் ஒருவர் வந்தே பாரத் ரயிலில் மறக்க முடியாத பயணத்தை பரிசளித்து அசத்தியுள்ளார். ‘புக்கட் முசாஃபிர்’  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நூபூர் தம்பதியினரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்து தீயாய் பரவி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில், முதியவரான தந்தை ரயில்வே பிளாட்பாரத்தில் அமைதியாகக் காத்திருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, நாட்டின் அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் ஏறும் அவர், தனது சொகுசு இருக்கையில் அமர்ந்து, பெரிய கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே தெரியும் இயற்கை அழகை வியப்புடனும் புன்னகையுடனும் ரசித்தபடி பயணிக்கிறார். தன் வாழ்நாளில் முதன்முறையாக இத்தகைய நவீன ரயிலில் பயணிக்கும் அந்தத் தந்தையின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் அமைதியும் பார்ப்போரின் மனதை நெகிழச் செய்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Palash Sen (@instadhoom)

இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான வரிகள் பலரையும் கலங்க வைத்துள்ளது. அதில், “அக்காலத்தில் வெறும் ₹5 ஆட்டோ கட்டணத்தைச் மிச்சப்படுத்தி, அந்தப் பணத்தைக் குடும்பத்திற்காகச் சேமிக்க என் தந்தை தினமும் அலுவலகத்திற்கு நடந்தே செல்வார். ஆனால் இன்று, எனது தந்தைக்கு வசதியான வாழ்க்கையை வழங்க என்னால் முடிந்த அளவுக்கு அதிக பணம் செலவழிக்கவும், அவரைச் சந்தோஷப்படுத்தவும் நான் தயாராக இருக்கிறேன்” என்று மகன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இணையத்தில் வெளியான இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பெற்றோர் தமக்காகச் செய்த தியாகங்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்குத் திரும்ப அன்பு செலுத்துவதும், இதுபோன்ற வசதியான அனுபவங்களைக் கொடுப்பதுமே ஒரு மகனின் உண்மையான வெற்றி என்று பலரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர். தியாகம் செய்த தந்தையின் முகத்தில் மிளிரும் இந்தச் சின்னஞ்சிறு புன்னகை, இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.