இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக மைதானத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் வீரர்களின் உடல் தகுதி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் அல்ல, இந்திய அணியின் முக்கிய நட்சத்திரங்கள் உட்பட ஒட்டுமொத்தமாக 6-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மையம் தற்போது கிரிக்கெட் வீரர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இந்த வார இறுதிக்குள் இந்திய அணி மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் என மொத்தம் 12 பேர் உடல் தகுதியை நிரூபிப்பதற்காக இங்கே வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம் அடைந்தவர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் முதன்மையாக உள்ளன.

இவர்களுடன் இங்கிலாந்து தொடரின் போது காயமடைந்த வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் ஏற்கனவே அங்கு சிகிச்சை பெற்று வரும் ஆகாஷ் தீப் ஆகியோரும் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட மேலும் சில வீரர்களும் விரைவில் பெங்களூர் செல்லவுள்ளனர். மேலும், இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் முகமது சிராஜ் போன்றோரும் தங்களின் உடல் தகுதியைச் பரிசோதிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முழுமையாகக் குணமடைவதற்கு முன்பே அவசர அவசரமாக அணியில் சேர்க்கப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஹர்ஷித் ராணாவுக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது உடல் எடை  குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனது பழைய எடையை மீட்டெடுப்பதற்கு முன்பே அவருக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிர்ச்சியாக, வாஷிங்டன் சுந்தர் டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டபோது, அவர் விளையாடுவதற்குத் தகுதியான உடல்தகுதியுடன் இல்லை என்றும், அணியில் சேர்ந்த 10 முதல் 12 நாட்களுக்குப் பிறகுதான் அவர் ஓரளவுக்குத் தகுதி பெற்றார் என்றும் கூறப்படுகிறது.

இந்த மோசமான உடல் தகுதிதான் தற்போது இந்திய அணியின் ஃபீல்டிங் தரம் பாதாளத்திற்குச் செல்ல முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. மைதானத்தில் வீரர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாமல் திணறுவதால், மிக எளிதான கேட்சுகள் கோட்டை விடப்படுகின்றன; எதிரணிக்கு ரன்களும் வாரி வழங்கப்படுகின்றன. வீரர்களின் இந்த அலட்சியப் போக்கு மற்றும் பிசிசிஐ-யின் அவசரத் தேர்வுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தையும் கோபத்தையும் கொட்டி வருகின்றனர்.