வருடத்திற்கு ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பது என்பது பலருக்கும் நிதி சுதந்திரத்தின் உச்சகட்ட அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அத்தகைய அதிக சம்பளம் கூட ஒரு மனிதனைப் பணக்காரராக மாற்றிவிடாது என்றும், உண்மையான பிரச்சினை சம்பளத்தில் இல்லை, நாம் வாழும் வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது என்றும் பெங்களூரைச் சேர்ந்த சாசனக் கணக்காளர்  மீனல் கோயல் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெலாய்ட்   ஆகிய முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அவர், தனது ஆரம்பக்கால அனுபவங்களை லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்து, அதிக வருமானம் மட்டுமே ஒருவரைச் செல்வந்தராக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தனது பதிவில் விளக்கியுள்ள மீனல் கோயல், “நான் கேபிஎம்ஜி நிறுவனத்தில் மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதித்தபோது, வருடத்திற்கு ரூ. 1 கோடி ஈட்டினால் மிகப்பெரிய பணக்காரராகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணம்” என்று குறிப்பிட்டுள்ளார். அதிக வருமானம் பெறும்போது மனிதர்களிடம் இயல்பாகவே ஏற்படும் ‘வாழ்க்கை முறை பணவீக்கம்’ தான் சேமிப்பைக் கரைக்கும் முக்கிய காரணியாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, வாடகை வீட்டிலிருந்து ஆடம்பர வீட்டிற்கு மாறுவது, சாதாரண இருசக்கர வாகனத்திற்குப் பதிலாக தவணை முறையில் பிஎம்டபிள்யூ  கார் வாங்குவது மற்றும் தினமும் வெளியில் உணவருந்துவது போன்ற வீண் செலவுகள் அதிகரிப்பதால், ஈட்டும் பணம் முழுமையாகக் கரைந்துவிடுகிறது.

இதற்குச் சான்றாக, இன்று ஆண்டிற்கு ரூ. 50 லட்சம் சம்பாதிக்கும் மென்பொருள் பொறியாளர்களை விட, ஆண்டிற்கு ரூ. 12 லட்சம் ஈட்டும் அரசு ஊழியர்கள் அதிகமாகச் சேமிப்பதாக அவர் ஒப்பீடு செய்துள்ளார். இந்தியாவில் ஆண்டிற்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்கள் வெறும் 2.3 லட்சம் பேர் மட்டுமே என்றும், அது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0.16 சதவீதம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ள அவர், கோடீஸ்வரர் ஆவதற்கு ஆண்டிற்கு கோடி ரூபாயில் சம்பளம் தேவையில்லை என்று கூறியுள்ளார். சரியான நிதி ஒழுக்கமும், முறையான முதலீட்டுத் திட்டமிடலும் இருந்தால் மட்டுமே ஒருவர் உண்மையான நிதிச் சுதந்திரத்தைப் பெற முடியும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆண்டுதோறும் 10 சதவீதச் சம்பள உயர்வும், 12 முதல் 15 சதவீத முதலீட்டு லாபமும் இருந்தால், சாதாரணச் சம்பளம் வாங்கும் ஒருவர் கூட 10 ஆண்டுகளில் ரூ. 1 கோடி சேமிப்பை எட்ட முடியும் என்று கணித்துள்ளார். அதற்கு ஐஐடி (IIT) பட்டமோ அல்லது கோடீஸ்வரக் குடும்பப் பின்னணியோ தேவையில்லை, நிதி ஒழுக்கம் மட்டுமே போதுமானது என்று அவர் அறுதியிட்டுக்கூறியுள்ளார். அதிக சம்பளம் வாங்குவது முக்கியமல்ல, அதில் எதைச் சேமிக்கிறோம் என்பதே முக்கியம் என்ற இவரது கருத்து, சமூக வலைதளங்களில் வேலைக்குச் செல்லும் இளைஞர்களிடையே தற்பொழுது பெரும் வரவேற்பையும் யோசனையையும் பெற்று வைரலாகி வருகிறது.