பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதிப்போட்டியைக் காண்பதற்காக, பணிபுரியும் நிறுவனத்தில் ஊழியர் ஒருவர் போட்ட கணக்கு, சமூக வலைதள ரீல்ஸ் வீடியோ ஒன்றால் தவிடுபொடியாகியுள்ளது. வழக்கமாக வேலைக்குச் செல்லும் நபர்கள் லீவு எடுப்பதற்காகப் பல்வேறு காரணங்களைக் கூறுவது உண்டு. ஆனால், ஒரு ஊழியர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டு எடுத்த விடுமுறை, ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவால் ரத்து செய்யப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட தகவலின்படி, குறிப்பிட்ட அந்த ஊழியர் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்துள்ளார். மேனேஜர் இதுகுறித்து கேள்வி எழுப்பவே, விடுமுறை எடுப்பதைக் குறைத்துக் கொண்டு தினமும் அலுவலகத்திற்குத் தாமதமாக வரத் தொடங்கியுள்ளார். மேனேஜர் கேட்கும்போதெல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் என்ற வழக்கமான காரணத்தைக் கூறித் தப்பித்து வந்துள்ளார். ஆனால், மற்றொரு மேனேஜர் “இவன் இரவு முழுவதும் உலகக்கோப்பை போட்டிகளைப் பார்த்துவிட்டு காலையில் தாமதமாக வருகிறான்” என்று விளையாட்டாகக் கூறியது, முதன்மை மேனேஜருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
சந்தேகமடைந்த மேனேஜர், அந்த ஊழியர் தாமதமாக வந்த நாட்களையும், அவர் விடுமுறை எடுத்த நாட்களையும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அட்டவணையோடு ஒப்பீட்டுப் பார்த்துள்ளார். அப்போதுதான், ஃபிரான்ஸ், போர்ச்சுகல், அர்ஜென்டினா போன்ற முக்கிய அணிகள் மோதிய போட்டிகள் நடைபெற்ற நாட்களில்தான் அந்த ஊழியர் விடுமுறை எடுத்ததும் ,தாமதமாக வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, வரவிருக்கும் பிஃபா இறுதிப்போட்டியைக் காண்பதற்காக, திங்கட்கிழமை அன்று “குடும்ப விசேஷம்” எனக் காரணம் கூறி ஒரு மாதத்திற்கு முன்பே அவர் விடுமுறையும் ஒப்புதல் பெற்றிருந்தார்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்த சூழலில், வார இறுதியில் மேனேஜரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ தென்பட்டது. அதில் ஒரு பள்ளியின் முதல்வர், பிஃபா இறுதிப்போட்டியை முன்னிட்டு திங்கட்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த மேனேஜருக்குத் தன் ஊழியரின் திங்கட்கிழமை விடுமுறை மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக ஊழியரைத் தொடர்புகொண்ட மேனேஜர், “குடும்ப விசேஷம் என்றால் திருமணப் பத்திரிகையோ அல்லது ரயில டிக்கெட்டோ அனுப்பு” என்று கேட்க, ஊழியரிடம் எந்த ஆதாரமும் இல்லை. உடனே மேனேஜர் அந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் லிங்கை அனுப்பி, “என்னை ஏமாற்ற முடியாது, திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும்” என உத்தரவிட்டு விடுமுறையை ரத்து செய்தார். இந்த சுவாரசியமான சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
