இன்றைய உலகமயமாக்கல் சூழலில், 30 வயதைத் தாண்டியவுடனேயே சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும், ஆடம்பர கார் வைத்திருக்க வேண்டும், வங்கிக் கணக்கில் பல லட்சங்கள் சேமிப்பு இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் வெற்றிக்கான அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சமூகத்தின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தனது 35-வது வயதில் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான பார்வையை ஆஷிஷ் ஜெயின் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “எனக்கு 35 வயதாகிறது. ஆனால் எனக்கு சொந்தமாக வீடோ, காரோ இல்லை. வங்கியில் பெரிய தொகையோ, பங்குச்சந்தையில் பெரிய முதலீடுகளோ, அல்லது மிகச்சிறந்த உயர்பதவி கொண்ட வேலையோ கூட இல்லை. ஆனால், நான் ஒரு நல்ல வாடகை வீட்டில் வசிக்கிறேன். என்னால் ஊபர் டாக்சியில் பயணிக்க முடிகிறது. மிக முக்கியமாக, எனக்கு எந்தக் கடனும் இல்லை. கடந்த ஆண்டை விட இப்போது எனது உடலும், மனமும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது” என்று மிகவும் யதார்த்தமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அடுத்த ஒரு வருடத்தில் நமக்கு எந்தப் பயனும் தராத விஷயங்களை நினைத்து தேவையில்லாமல் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன். வீடு, கார் வாங்க வேண்டும் என்று என்மீதே அழுத்தத்தைப் போட்டுக்கொள்வதில்லை. உடற்பயிற்சியிலும் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துகிறேன். புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. நொறுக்குத் தீனிகள் உண்பதையும் குறைத்துவிட்டேன். வாழ்க்கையில் எல்லாவற்றையும் உடனே சாதித்துவிடத் தேவையில்லை. ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாகக் கடந்து, உங்களை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று நேர்மறையான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

ஆஷிஷ் ஜெயினின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பயனர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். “கடனில்லாமல் இருப்பது, மன அமைதியோடு வாழ்வதுதான் 35 வயதில் உண்மையான வெற்றி!”, “மற்றவர்களின் இன்ஸ்டாகிராம் வாழ்க்கையோடு நம்மை ஒப்பிடாமல், நமக்கான வாழ்க்கையை வாழ்வதே சிறந்தது” என்று பலரும் அவரது யதார்த்தமான எண்ணத்தைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.