எகிப்தின் ஷார்ம் எல் ஷெய்க் நகரில் நடைபெற்ற காசா அமைதி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பாராட்டி பேசினார். “இந்தியா என்பது ஒரு பெரிய நாடு, அங்கே என்னுடைய நல்ல நண்பர் மோடி இருக்கிறார். அவர் அருமையாக செயற்படுகிறார். எனக்குத் தோன்றுகிறது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இனிமேல் நல்ல உறவில் வாழப் போகின்றன” என உரையாற்றினார் டிரம்ப்.

உடனே மேடையில் பின்னால் நின்ற பாக் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃ, சிரித்தபடியே தலை ஆட்டினார். இதனால் ஒட்டுமொத்தக் கூடத்தில் சிரிப்பலை எழுந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேடையில் டிரம்ப் பேசிக்கொண்டிருக்க, பின்னாலிருந்த பாகிஸ்தான் பிரதமரிடம் திரும்பி, “இது சரிதானே?” என்று கேட்டதும், அவர் தலை ஆட்டியது கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. பின்னர், டிரம்பின் அழைப்பில் மேடையில் பேசிய ஷெஹ்பாஸ் ஷரீஃ, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணு போர் வெடிக்க நேரத்தை, இந்த தலைவர் தன் அற்புதமான குழுவுடன் தடுத்து நிறுத்தினார்.

இல்லையெனில், யாரும் உயிரோடே இருந்து அந்த கதையைச் சொல்வதற்கு இல்லாமல் போயிருப்போம்” என உணர்வுபூர்வமாக உரையாற்றினார். இதனை தொடர்ந்து டிரம்ப் தன்னைப் பற்றி கூறியது போல, அவர் “மொத்தம் 8 பிரச்சனைகளை தீர்த்து விட்டேன்” என்றும் கூறினார்.

இந்தப் பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மே 10-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதிகள் நேரடியாக பேசி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இந்திய அரசு விளக்கம் அளித்தது.

எந்த விதமான மூன்றாம் தரப்பு தலையீடு கிடையாது என சுட்டிக் காட்டியுள்ளது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக வெளிவிவகாரத் துறை துணை மந்திரி கீர்த்திவர்தன் சிங் பங்கேற்றார். மேலும் மோடியும், காசா அமைதிக்கு டிரம்ப் செய்த பங்களிப்பை பாராட்டியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.