காசா பகுதியில் நிலவும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இஸ்ரேலுக்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இதனைத் தொடர்ந்து, எகிப்தில் உள்ள ஷார்ம் எல்-ஷேக் என்ற சுற்றுலா நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதில், ஆயுதங்களை குறைப்பது உள்ளிட்ட 21 அம்ச திட்டங்களை டிரம்ப் வெளியிட்டார்.
எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தா எல்-சிசி, “இந்த ஒப்பந்தம் பிராந்திய அமைதிக்கான முக்கியமான திருப்புமுனையாகும்” என தெரிவித்தார். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பு பிடித்துவைத்திருந்த இஸ்ரேல் பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைந்தனர். இதனால், இஸ்ரேல் மற்றும் காசா பகுதிகளில் மகிழ்ச்சி நிலவுகிறது.
இந்த உச்சி மாநாட்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர், துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஒரே பெண் தலைவராக இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவரை டிரம்ப் மேடையில் கைகுலுக்கி வரவேற்றார். மாநாட்டில் பேசும் போது, மெலோனிக்கு இந்திய பாரம்பரிய நமஸ்தே வணக்கத்தை டிரம்ப் தெரிவித்தது கவனத்தை ஈர்த்தது.
உச்சி மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், உலக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, இத்தாலி பிரதமர் மெலோனியின் அழகைச் சிறப்பித்தது மாநாட்டில் கலகலப்பை ஏற்படுத்தியது. “நம்மிடையே ஒரு இளம் பெண் இருக்கிறார். இதனைச் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்; சொல்லினால் என் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும். ஆனால் அவர் அழகானவர் என்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை,” என்று கூறினார்.
அப்போது மேடையில் டிரம்பின் பின்னால் நின்றிருந்த மெலோனி சிரிப்புடன் இருந்தாலும், சிறிது அசவுகரியமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியல் விமர்சகர் ஹாரி சிஸ்சன், “உலக அரங்கில் அமெரிக்காவுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் டிரம்ப் தொடர்ந்து நடந்து கொள்கிறார்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன், மெலோனியிடம் “நீங்கள் விமானத்தில் இறங்கும்போது பார்த்தேன்; சிறப்பாக இருந்தீர்கள். ஆனால் நீங்கள் புகைப்பிடிப்பதாக கேட்டேன். அந்த பழக்கத்தை விட நான் உங்களுக்கு உதவ முயற்சிப்பேன்,” என்று கூறினார். இதற்கு மேக்ரான் உடனே, “அது சாத்தியமில்லாதது!” என நகைச்சுவையாக பதிலளித்து சிரிப்பை ஏற்படுத்தினார். மேலும் அதற்கு மெலோனி, “புகைப்பிடித்தலை விட்டால், அது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திவிடும்,” என நகைச்சுவையாக பதிலளித்தார்.
