மேற்காசியாவில் போர் தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், மோதல் இப்போது ‘கட்டமைப்பு போராக’ (Infrastructure War) மாறியுள்ளது. தெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஊழியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொருளாதார மையங்களைச் சிதைக்கப் போவதாக ஈரான் ராணுவத்தின் ‘கதம் அல்-அன்பியா’ (Khatam Al-Anbiya) அமைப்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தொடர்புடைய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதால், பொதுமக்கள் அங்கிருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC), கூகுள், மைக்ரோசாஃப்ட், ஐபிஎம், என்விடியா மற்றும் ஆரக்கிள் போன்ற முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் ‘கிளவுட்’ உள்கட்டமைப்புகளைத் தங்களது புதிய இலக்குகளாக அறிவித்துள்ளது. துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்கள், ஓமன் கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீதான தாக்குதல் என ஈரான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது. குவைத் மற்றும் சவுதி அரேபியா ஈரானின் ட்ரோன்களை இடைமறித்துச் சுட்டு வீழ்த்தினாலும், ஆயில் கிணறுகள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் மீதான இந்த நேரடி மிரட்டல், உலகப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
