மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கியுள்ள பாகிஸ்தானுக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“சவுதி அரேபியாவுக்கு ஆபத்து ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் நிச்சயம் உதவும்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் இந்த கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி இடையே கையெழுத்தாகியுள்ள ‘நேட்டோ’ பாணியிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, சவுதி மீதான தாக்குதலைத் தன் மீதான தாக்குதலாகப் பாகிஸ்தான் கருதுவதும், அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீர் அவசரமாக ரியாத் சென்று பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்தியதும் ஈரானை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரானிய ஆளில்லா விமானங்கள் சவுதியின் ‘அராம்கோ’ எண்ணெய் வயல்களைத் தாக்கி வரும் சூழலில், பாகிஸ்தானின் இந்த தலையீடு சர்வதேச அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும், இதற்கான விளைவுகளை உலகம் சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் ஜனாதிபதி தொலைபேசி வாயிலாக எச்சரித்துள்ளார்.
