பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் முக்கியப் பிரிவான மஜீத் பிரிகேட் ஆகிய அமைப்புகளைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடைப் பட்டியலில் சேர்க்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐநா-வின் 1267 அல்-கொய்தா தடைக் குழுவிடம் இதற்கான கூட்டுப் பரிந்துரையை இரு நாடுகளும் சமர்ப்பித்திருந்தன.
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த மாதத் தொடக்கத்தில் இந்தத் தடையை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளன. பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படுவதாகவும், பிராந்தியப் பாதுகாப்பிற்கு அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும் ஐநா-வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி ஆசிம் இப்திகார் அகமது பாதுகாப்பு கவுன்சிலில் வாதிட்டும் இந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இருக்கும் பாகிஸ்தானுக்கும், அதன் நட்பு நாடான சீனாவிற்கும் இந்தச் சம்பவம் மிகப்பெரிய ராஜதந்திரப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தானைச் தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது இந்தியா கொண்டு வந்த பல தடைப் தீர்மானங்களைச் சீனா தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இதே ஐநா மன்றத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தைத் தனி நாடாகப் பிரிக்கப் போராடி வரும் பலுசிஸ்தான் விடுதலைப் படை, அங்குள்ள இயற்கை வளங்களின் பலன்கள் உள்ளூர் மக்களுக்குக் கிடைப்பதில்லை எனக் கூறி, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, அதன் மஜீத் பிரிகேட் பிரிவு அங்குள்ள சீனத் திட்டங்களையும், சீனத் தொழிலாளர்களையும் குறிவைத்துத் தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் சர்வதேசத் தடை விவகாரங்களில் வல்லரசு நாடுகளுக்கு இடையே உள்ள அதிகாரப் போட்டியை மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
