மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய ராணுவத் தளபதி புதன்கிழமை விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை உறைய வைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் நாடுகளுக்குப் பாடம் புகட்டும் வகையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $200-ஐ எட்டுவதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) வழியாக அமெரிக்கா அல்லது இஸ்ரேலுக்குப் பயனளிக்கும் ஒரு லிட்டர் எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்கப்பட மாட்டாது என ஈரான் ராணுவம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

​மேலும், எதிரி நாடுகளுக்காக எண்ணெய் கொண்டு செல்லும் எந்தவொரு ஆயில் டேங்கர் கப்பல்களும் ஈரானின் “சட்டபூர்வமான இலக்காக” (Legitimate Target) கருதப்பட்டுத் தாக்கப்படும் என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த அதிரடி முடிவால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நடந்தால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். போர்க்களத்தில் நிலவும் இந்த “எண்ணெய் யுத்தம்” தற்போது உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.