தமிழகத்தில் பொதுத்தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது,
தமிழகத்தில் தற்போது மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்த விழிப்புணர்வுப் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தங்களது மனுக்களைத் தாக்கல் செய்யலாம். அதன்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. அதே நேரத்தில் பொது விடுமுறை நாட்களில் மனுத்தாக்கல் செய்ய அனுமதி இல்லை.
தேர்தல் நன்னடத்தை விதிகளின்படி, முறையற்ற பணப் பரிமாற்றத்தைத் தடுக்க மாநிலம் முழுவதும் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. ஒரே நாளில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெரிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் (Online Transactions) தீவிரமாகக் கண்காணிக்கப்படும். சோதனைகளின் போது பொதுமக்களைத் துன்புறுத்தக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முறையான ஆவணங்கள் இருந்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் திருப்பித் தரப்படும்.
வாக்களிக்கும் அறைக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் வசதிக்காக செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்க வாக்குச்சாவடிகளிலேயே தனிப் பெட்டக (Locker) வசதிகள் செய்து தரப்படும்.
அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட முடியும். பிரசாரத்திற்கான அனுமதியை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவே பெற வேண்டும்.
மேலும் 5,000 பேருக்கும் மேல் கூடும் கூட்டங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும் என்று கூறினார்.
