தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த ஆண்டு கரூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நாற்பத்தியொரு பேர் பலியான சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று மீண்டும் ஆஜரானார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்ற அந்தப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கட்சித் தரப்பில் கூறப்பட்டதால் காவல்துறையினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் விஜய்யிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

சிபிஐ அலுவலகத்தில் விசாரணை முடிந்து விஜய் வெளியேறிய வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதிகாரத்தாலும் அவதூறுகளாலும் தங்களை முடக்க நினைத்தவர்கள் மக்கள் ஆதரவின் முன்னால் தோற்றுப் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் தொடங்கிய இந்தப் பயணம் விரைவில் புனித ஜார்ஜ் கோட்டையை அடையும் நாள் நெருங்கிவிட்டதாகவும் இனி ஒவ்வொரு ஊரிலும் தங்களது தலைவரின் மக்கள் சந்திப்பு எழுச்சியுடன் நிகழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றத்திற்கான மக்களின் கனவு பலிக்கட்டும் என்றும் எளியவர்களுக்கான மக்களாட்சி மலரட்டும் என்றும் அவர் விடுத்துள்ள செய்தி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.