2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள நெறிமுறை வழிகாட்டுதல்களை மீறிய காரணத்தால், இந்தியாவில் 43 OTT தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அறிவித்துள்ளார்.
இத்தளங்கள், நிர்வாணம், பாலியல், வன்முறை ஆகிய உள்நடக்கங்களை தவறான முறையில் வகைப்படுத்தியதுடன், குழந்தைகள் காணக் கூடாத விஷயங்களைத் தடுக்க வேண்டிய பாதுகாப்புகளை பின்பற்றவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைய, 2024ம் ஆண்டு மார்ச்சில் 18 OTT தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி 25 OTT தளங்கள் கூடுதலாக முடக்கப்பட்டுள்ளன. இந்த தளங்கள் அனைத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உள்ள வழிகாட்டுதல்களை மீறியதாக மத்திய அரசு கூறியுள்ளது. குறிப்பாக, இவை தங்களது உள்ளடக்கங்களை தரவரிசைப்படுத்தாததோடு, பயன்படுத்துவோரின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2024ம் ஆண்டு மார்ச்சில் தடை செய்யப்பட்ட 5 OTT தளங்கள், புதிய டொமைன் முகவரிகளில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இவை மீண்டும் ஆபாசக் காணொளிகளை வெளியிடுவதை அமைச்சகம் கண்டறிந்துள்ளதாகவும், அவற்றின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தளங்களை கண்காணிக்க தனியான மைய கண்காணிப்பு குழுவும் செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
