மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் வசிக்கும் ராஜேஷ் என்பவர், எந்த குற்றமும் செய்யாமல் 395 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஜூன் 16ஆம் தேதி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பக்கத்து வீட்டில் வசித்த ஆஷா யாதவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ராஜேஷ், மாலையில் அவர் இறந்ததைத் தொடர்ந்து சாட்சி, ஆதாரம் இல்லாமலேயே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணை மற்றும் சட்ட உதவியின் பற்றாக்குறையால் அவர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் வாடியுள்ளார்.
பிரேத பரிசோதனையில், மரணக் காரணம் கழுத்தை நெரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், எந்த கைரேகைகளும், உறுதியான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. மேலும், சம்பவ நேரத்தில் ராஜேஷ் குற்றம் நடந்த இடத்தில் இருந்தார் என்பதை நிரூபிக்கும் சாட்சிகளும் இல்லை.
சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ரீனா வர்மா நீதிமன்றத்தில் வாதித்து, காவல்துறை விசாரணையில் பல குறைகள் உள்ளதை சுட்டிக்காட்டியதால் ராஜேஷ் விடுவிக்கப்பட்டார். மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைப் போலீசார் எடுக்காதது, அறிக்கைகளில் முரண்பாடுகள் இருந்தது போன்றவை நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தன.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, ராஜேஷின் வாழ்க்கை முற்றிலும் சிதைந்தது. வாடகை வீடு பூட்டப்பட்டது, வேலை தேட சென்ற இடங்களில் அவரை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். தற்போது தனது சகோதரியுடன் தங்கியிருக்கும் அவர், வாழ்க்கையை மீண்டும் தொடங்க வழிகள் தேடி அலையிறார். அவரது சகோதரி, காவல்துறையினர் ஆதார் அட்டை, மொபைல் போன்றவற்றை திரும்ப கொடுக்க ரூ.500 லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார்.
ராஜேஷின் வழக்கில், ரீனா வர்மா போன்ற ஒரு சட்ட உதவி வழக்கறிஞர்தான் அமைப்புக்குள் ஒரு கதவைத் திறந்தார்… இல்லையெனில் ராஜேஷ் இன்னும் சிறையில் இருப்பார். ஒரு வழக்கறிஞரை நியமிக்க தன்னிடம் பணம் இல்லை என்று ரீனா கூறினார்.
இந்த சம்பவம், காவல் விசாரணை அமைப்பின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது. ராஜேஷின் வழக்கு, நிரபராதிகளின் வாழ்க்கையை காவல்துறை அலட்சியம் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
“என் வாழ்க்கையின் ஒரு வருடம் திரும்புமா? என் கண்ணியம் மீளுமா?” என்ற ராஜேஷின் கேள்விகள், சமூக அமைப்பின் செயல்திறனை கேள்விக்குறியாக்குகின்றன.
