சென்னை மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருபில் கௌசல்யா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமானார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரஞ்சித் குமாரும், கௌசல்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ரஞ்சித் தனது மனைவியின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி கௌசல்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கௌசல்யாவை அவரது பெற்றோர் செம்மஞ்சேரிக்கு அழைத்து சென்றனர். நேற்று காலை ரஞ்சித் குமார் தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று கௌசல்யாவை தன்னுடன் வாழ வரும்படி அழைத்தார்.

அதற்கு கௌசல்யா மறுப்பு தெரிவித்ததால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ரஞ்சித் குமார் கௌசல்யாவை பலமாக தாக்கியதால் அவரது தலை மற்றும் காலில் படுகாயம் ஏற்பட்டது. மேலும் ரஞ்சித் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தையின் காலை பிடித்து சுவரில் அடித்ததால் படுகாயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து பக்கம் பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மயக்க நிலையில் இருந்த கௌசல்யா தனது குழந்தை இறந்தது கூட தெரியாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.