கடலூர் மாவட்டத்தில் உள்ள வீர பெருமாநல்லூர் கிராமத்தில் விவசாயியான பன்னீர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று பன்னீர் உறவினரான சின்னையன் என்பவருடன் மொபட்டில் சேமகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திருவாமூர் பாலம் அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பன்னீர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சின்னையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பன்னீரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.