கள்ளக்குறிச்சி மாவட்டம் மரவாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ள இவர், தினமும் மாத்திரைகளை உட்கொண்டு வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த கன்னியம்மாள் (70) என்ற மூதாட்டி, ராஜேந்திரனின் வீட்டுக்கு அடிக்கடி வருவது வழக்கம். அப்போது ராஜேந்திரன் மாத்திரை சாப்பிடுவதைப் பார்க்கும் போதெல்லாம், “எப்போ பாத்தாலும் இவ்வளவு மாத்திரை சாப்பிடுற.. இதெல்லாம் விட்டுட்டு செத்துத் தொலையேன்; உன்னால தான் உன் பொண்டாட்டி கஷ்டப்படுறா” என வசைபாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வழக்கம் போல நேற்று ராஜேந்திரன் மாத்திரை போட்டபோது, கன்னியம்மாள் மீண்டும் அதே பாணியில் அவரைத் திட்டியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், “என்னையா சாகச் சொல்கிறாய்?” எனக் கேட்டு, அருகில் இருந்த இரும்பு ஊதாங்குழலால் கன்னியம்மாளின் தலையில் சரமாரியாக நான்கு முறை அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகச் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவர் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வாய்த்தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.