கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமலையன் சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற மார்கழி மாத தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கி வைப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்திருந்தார்.
அவர் தேரை வடம் பிடித்து இழுக்கத் தயாரானபோது, அங்கிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் திடீரென அமைச்சருக்கு எதிராக ‘பாரத் மாதா கி ஜே!’ என உரக்கக் கோஷமிட்டனர்.
தொடர்ச்சியாகத் தமக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர்பாபு, கோஷமிட்ட நபரை நோக்கி, “சோத்த திங்கிறீயா இல்லையா?” என ஆவேசமாகக் கேட்டார்.
View this post on Instagram
கோயிலில் புனிதமான ஒரு விழா நடக்கும்போது அரசியல் கோஷங்கள் எழுப்புவதைக் கண்டிக்கும் வகையில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியதாகத் தெரிகிறது.
அமைச்சரின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் குறுக்கிட்டுச் சூழலைச் சரி செய்ய முயன்றனர். இருப்பினும், அதிருப்தியடைந்த அமைச்சர் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அமைச்சரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், குமரி மண்ணில் அமைச்சருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதல் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
