தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் கடந்த புத்தாண்டு நள்ளிரவில் அரங்கேறிய பட்டாக்கத்தி ‘ரீல்ஸ்’ விவகாரம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொலை முயற்சி வழக்கில் கைதாகி, சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்று திரும்பிய 16 வயது சிறுவர்கள், தங்கள் மீதான குற்றப் பின்னணியை ஒரு பெருமையாகக் கருதி தங்களை ‘ரவுடிகளாக’ சித்தரிக்க முயன்றுள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்தும் திருந்தாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் கிடைக்கும் தற்காலிகப் புகழுக்காகவும், சினிமா பாணி கெத்துக்காகவும் சிறுவர்கள் ஆயுதங்களைக் கையில் எடுப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிரடியாகச் செயல்பட்ட தாம்பரம் போலீசார், வீடியோ ஆதாரங்களைக் கொண்டு இரண்டு சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். சீர்திருத்தப் பள்ளிகள் வெறும் தண்டனை கூடமாக இல்லாமல், சிறுவர்களின் மனநிலையை மாற்றும் மையங்களாக மாற வேண்டும் என்பதும், சமூக ஊடகப் பயன்பாட்டில் பெற்றோரின் கண்காணிப்பு அவசியம் என்பதும் இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் கசப்பான உண்மையாகும்.
