மகாராஷ்டிர மாநிலம் அம்பர்நாத் பகுதியில், திருமணமாகி ஒன்றரை மாதங்களே ஆன நிலையில், வரதட்சணைக் கொடுமை மற்றும் சித்திரவதைக்கு பயந்து விசாகா திலேகர் (26) என்ற புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, பெண்ணின் கணவரான டாக்டர் நிதின் திலேகரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 30, 2026 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்பு எல்லாம் சுமுகமாக இருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு சீர்வரிசை கிடைக்கவில்லை என்றும், பெற்றோர் வீட்டிலிருந்து பணம் மற்றும் நகைகளை வாங்கி வருமாறும் விசாகாவுக்கு அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினரால் கடுமையான மன ரீதியான மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகள் தொடங்கின.

கணவர் நிதின் திலேகர், தனது மனைவி நாள் முழுவதும் என்ன செய்கிறார், யாரிடம் பேசுகிறார் என்பதைக் கண்காணிப்பதற்காக வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, அவரது தனிமனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளார். மேலும், விசாகா தனது பெற்றோர் குடும்பத்தினருடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அண்டை வீட்டுப் பெண்ணுடன் பேசியதற்காக விசாகாவை அவரது கணவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனக்கு நேர்ந்த சித்திரவதைகள் குறித்து விசாகா தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோர் அவரைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராக இருந்த நிலையிலேயே, விசாகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் தொடர்பாக தற்கொலைக்குத் தூண்டுதல், வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, டாக்டர் நிதின் திலேகரைக் கைது செய்துள்ளனர்.