ராஜஸ்தான் மாநிலம் லவாதர் கிராமத்தில், பேராசை மற்றும் கடன் தொல்லையின் காரணமாக 58 வயது பெண் ஒருவர், தனது அண்டை வீட்டு முதியவரை கோடரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி காலை, அப்பகுதியில் உள்ள குப்பை குவியலில் இருந்து துர்நாற்றம் வீசியதோடு, தெரு நாய்கள் சில சாக்கு மூட்டைகளைக் கீறிக்கொண்டிருந்ததை கிராம மக்கள் கவனித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு சாக்கு மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில், உயிரிழந்தவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஹர்பாய் குர்ஜார் (70) என்பதும், அவர் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. அவரது உடலில் எப்போதும் கனமான வெள்ளி நகைகள் இருக்கும் என்பதால், அதனை கொள்ளையடிக்க அவரது அண்டை வீட்டில் தனியாக வசித்து வந்த ரசால் தேவ் (58) என்ற பெண் இந்த கொடூர கொலையை செய்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
கணவர் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட கடன்கள், மகன்களின் திருமணம் மற்றும் விபத்து சிகிச்சை என ரசால் தேவின் பெயரில் மொத்தம் 25 லட்சம் ரூபாய் கடன் இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்டு தொடர்ந்து நெருக்குதல் அளித்ததால், ஹர்பாயின் நகைகளைக் கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த ஜூன் 9 அன்று ஹர்பாயை டீ குடிக்க என்று கூறி தனது வீட்டிற்குள் வரவழைத்த ரசால் தேவ், கோடரியால் அவரது தலையில் பலமாகத் தாக்கி, பின்னர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். கால்களிலும் கைகளிலும் இருந்த வெள்ளி நகைகளை எளிதாகக் கழற்றுவதற்காக முதியவரின் கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
நகைகளைக் கொள்ளையடித்த பின், இரண்டு நாட்களாக சடலத்தின் பாகங்களை வீட்டிலேயே மறைத்து வைத்து, ஜூன் 11 நள்ளிரவில் குப்பை கிடங்கில் வீசியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட சிறப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி, குற்றத்தை ஒப்புக்கொண்ட ரசால் தேவை கைது செய்ததோடு, அவரது வீட்டில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கோடரி மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
