திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும், கணவர் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து வந்த அமிர்தம் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாகச் செங்கம் அருகே உள்ள ஒரு விவசாய நிலத்தில் குடிசை அமைத்துத் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், புத்தாண்டு அன்று இரவு அந்த குடிசை திடீரென தீப்பற்றி எரிந்தது.
அதிகாலை அந்தப் பக்கமாகச் சென்றவர்கள் பார்த்தபோது, வீடு முற்றிலும் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதையும், உள்ளே இருவர் சடலமாகக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து வந்த மாவட்ட எஸ்பி சுதாகர் மற்றும் செங்கம் போலீசார் நடத்திய விசாரணையில், இது தற்செயலாக நடந்த தீ விபத்து அல்ல என்பது தெரியவந்துள்ளது.
சக்திவேலும் அமிர்தமும் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டி விட்டு, குடிசைக்குத் தீ வைத்துள்ளனர். தீப்பற்றி எரிந்தபோது இருவரும் வெளியே வர முடியாமல் கதவைத் தட்டியும் பயனின்றி, உள்ளேயே கருகி உயிரிழந்துள்ளனர்.
திருமணத்தை மீறிய இந்த உறவால் ஆத்திரமடைந்த இவர்களது குடும்ப உறுப்பினர்களே இந்த கொடூரக் கொலையைச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இந்தப் படுகொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
