கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி கிணத்துக்கடவு பெரியார் நகரில் இருக்கிறது. இங்கு ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம் கிணத்துக்கடவு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணி பாதிக்கப்பட்டது.

அதே நேரம் ஆத்துபொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவில் இருக்கும் தொட்டிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் தண்ணீர் நிரம்பி வழிந்து சர்வீஸ் சாலையில் ஆறாக ஓடியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மின்தடை ஏற்படும் நேரங்களில் தொட்டி நிறைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.