தமிழகம் முழுவதும் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்குத் தேவையான கணக்கீட்டுப் படிவத்தை வழங்கி வருகின்றனர்.
இருப்பினும், இந்த கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக வாக்காளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், படிவங்கள் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்ற விவரத்தை கண்டறியவும் வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் நீக்கம், சேர்த்தல், திருத்தம் தொடர்பான சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வு காண மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை எழுப்பி, தெளிவுபெறலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதிசெய்யும் நோக்கில் இந்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
