ரஷ்யாவில் ஜென்னி மற்றும் மக்தா என்ற இரு சர்க்கஸ் யானைகள் 25 ஆண்டுகளாக இணைந்து நடித்துவந்தனர். அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு, தங்களின் வயதான காலத்தை அமைதியாக கழித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் ஜென்னி திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம், மக்தாவை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் மக்தா தனது தோழி ஜென்னியை எழுப்ப முயற்சிக்கிறது. ஆனால் எந்த பதிலும் கிடைக்காததால், தனது தும்பிக்கையால் அவளின் உடலை அன்பாக அணைத்துக்கொண்டு, நேரம் கடந்தும் அங்கேயே இருந்து அழுதுக்கொண்டிருப்பது பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவர்களும் சென்று யானையின் உடலை பரிசோதிக்க முடியாத அளவிற்கு மக்தா அவர்களை அணுக விடாமல், தன் தோழியின் பக்கத்தில் நிற்பது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இந்த மனதை உருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரின் கண்களை கலங்க செய்துள்ளது. “காதல் எல்லையின்றி நிலைத்திருக்கிறது,” “யானைகளுக்கு மனிதர்களைப் போலவே மரண சடங்குகளை மேற்கொள்வதற்கான உணர்ச்சி உள்ளது,” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஜென்னி மற்றும் மக்தா இருவரும் சர்க்கஸில் இருந்தபோது கூட சில மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 2021ல், ஒரு நிகழ்ச்சியின் போது, ஜென்னி திடீரென மக்தாவை முட்டியது, இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு, இரு யானைகளும் தயாளரைத் தாக்கி, அவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர்களின் சர்க்கஸ் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது மக்தாவின் அழுகை உலகம் முழுவதும் யானைகளின் உணர்ச்சி விவேகத்தையும், மனிதர்களைப் போல் அனுபவிக்கும் துயரத்தையும் நினைவூட்டுகிறது.