கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் டி.பி.சி காலனியில் ஜெபமாலை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் காரில் திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே சமயம் புதுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜு(50), அவரது மனைவி தனக்கொடி(45) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரவக்குறிச்சி மேட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த ஜெபமாலை ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜு மற்றும் தனக்கொடியின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.