ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதை பொருளுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று முறையிட்டனர். அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தமிழகத்தில் எந்த குட்கா தயாரிப்பிற்கும் அனுமதி இல்லை என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்து வருகிறது என்றும் தெரிவித்தனர். இருதரப்பு விவாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி கூல் லிப் போதை பொருட்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடிய அளவிற்கு விற்பனை தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது. இப்படியே விட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். ஆகவே குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய, மாநில அரசு விரைவில் போதைப்பொருட்களை தடை செய்வது குறித்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றமே பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.