கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா, தனது வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வழக்கில், பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து அவருக்கு இன்று நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 2024ல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன், “தன் தாயை காணவில்லை” என அளித்த புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. விசாரணையில், அந்த பெண் பிரஜ்வால் ரேவண்ணாவின் தோட்டத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, 26 சாட்சிகள் மற்றும் 180 ஆவண ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் கூகுள் மேப் வழியாக அவரின் பயண பாதைகள், குற்றம் நடைபெற்றதாக கூறப்படும் தேதிகளில் அவர் இருந்த இடங்கள் உள்ளிட்ட டெக்னிக்கல் ஆதாரங்கள் முக்கியமான பங்கு வகித்தன. மேலும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்து பல  பெண்களின் ஆபாச வீடியோக்கள் மீட்கப்பட்டதாகவும் சிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு மட்டும் அல்லாமல், பிரஜ்வால் ரேவண்ணா மீது மேலும் மூன்று பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட இன்னும் இருவரும் அவர் மீது தனி வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தண்டனை விவரம் இன்று  அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி அவருக்கு இன்று நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.