தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்காததால் ரிலீஸ் தேதி தள்ளி போனது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தணிக்கை குழுவுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் படக்குழு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு மத்திய அரசு குடைச்சல் கொடுப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரும் நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காகவே ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காமல் பாஜக சதி செய்வதாக கூறிவரும் நிலையில் திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் அவ்வாறே கூறி வருகிறது.
அதே நேரத்தில் கரூர் விவகாரத்திலும் நடிகர் விஜயிடம் நேற்று சிபிஐ விசாரணை நடத்தியது. நடிகர் விஜய்க்கு அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் அடுத்தடுத்து சிக்கல் வருவது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். இவர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வருவதாக கூறப்படும் நிலையில் விஜய்யுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஜனநாயகன் படத்தை தடுக்கும் முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே திமுக விடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறிவரும் நிலையில் விஜய் பக்கம் சாய்ந்து வருவதாக ஒரு செய்தி வெளிவரும் நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ராகுல் பதிவிட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
— Rahul Gandhi (@RahulGandhi) January 13, 2026
