மகாராஷ்டிர மாநில ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் இடையே நிலவி வரும் மோதல் போக்கு தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநில அளவில் கூட்டணியில் நீடித்தாலும், மும்பை, புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் ஆகிய முக்கிய மாநகராட்சித் தேர்தல்களில் இரு கட்சிகளும் எதிரெதிர் துருவங்களாகக் களம் காண்கின்றன.

குறிப்பாக, அஜித் பவார் தனது அரசியல் எதிரியான சரத் பவாருடன் கைகோர்த்து பாஜகவை எதிர்ப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், அஜித் பவார் வெறும் பேச்சிலேயே காலத்தை வீணடிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பட்நாவிஸின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள துணை முதலமைச்சர் அஜித் பவார், பாஜக தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்களைப் பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக, பிம்ப்ரி-சின்ச்வாட் மாநகராட்சியில் வெறும் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பாலம் கட்டும் திட்டத்தை, 7 கோடி ரூபாயாக உயர்த்தி கணக்கு காட்டி பெரும் முறைகேடு செய்துள்ளதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் கூட்டணியில் இருந்துகொண்டே ஒரு துணை முதலமைச்சர், முதலமைச்சரின் கட்சி மீது இத்தகைய ஊழல் புகார்களை முன்வைப்பது மகாராஷ்டிர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.