குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தற்காலிக இலவசங்களை வழங்குவதை விட மக்களைச் சுயமாக முன்னேற்றுவதற்கே பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் தேர்தலுக்காகவும் வாக்குகளுக்காகவும் இலவசங்களை வாரி வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன என்றும், அத்தகைய அரசியல் நாட்டின் நீண்ட காலப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பிரதமர் மோடி ஒருபோதும் வாக்குகளுக்காக தற்காலிக இலவச வாக்குறுதிகளை அளிப்பதில்லை என்றும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதையே அவர் தனது இலக்காகக் கொண்டு செயல்படுவதாகவும் கோயல் குறிப்பிட்டார். உதாரணமாக சூர்யாகர் திட்டத்தைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், சூரிய சக்தி பேனல்களை நிறுவுவதற்கு நுகர்வோரின் தனிப்பட்ட பங்களிப்பு அவசியம் என்று கூறினார்.

அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்று மக்கள் எதிர்பார்க்கக்கூடாது என்றும், அரசாங்கத்தை முழுமையாக நம்பியிருக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். ஒரு திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட அரசாங்க ஆதரவுடன் குடிமக்களின் பங்களிப்பும் மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், மின்சாரம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.