மும்பையில் இருந்து ஸ்ரீநகர் நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்தின் 6E 225 பயணிகள் விமானம், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு எதிர்பாராத விதமாக சிறிய விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​விமானம் பத்திரமாகத் தரையிறங்கி, பயணிகளை இறக்குவதற்காகத் தகுந்த நிறுத்துமிடத்தை (Parking Bay) நோக்கி மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த மின் கம்பம் ஒன்றின் மீது விமானம் பலமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் மோதலில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

​விமானம் மோதிய அதிர்ச்சியில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் அலறினர். இருப்பினும், உடனடியாகச் செயல்பட்ட விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மீட்புக் குழுவினர், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் எவ்வித காயங்களுமின்றி பத்திரமாக கீழே இறக்கினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விபத்து குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தற்காலிகமாகச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.