மும்பை மாநகராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில், “மும்பை ஒரு சர்வதேச நகரம்” எனத் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மும்பை மாநகராட்சிக்கு வரும் 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி, மலாடு, சயான் கோலிவாடா உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை அண்மையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: “மக்கள் தற்போது மூன்று என்ஜின் ஆட்சியை விரும்புகின்றனர். மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என இருக்கும் நிலையில், மும்பை மாநகராட்சியையும் பா.ஜனதா கைப்பற்றினால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம். மும்பை என்பது வெறும் மராட்டிய நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்.” என்றார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், “மும்பை மராட்டியர்களுக்குச் சொந்தமானது அல்ல என்று கூறிய அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்து, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள மகாராஷ்டிர முதலவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: “அண்ணாமலையின் பேச்சை இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்தி மொழி சரளமாகத் தெரியாது. அவர் இந்தியில் பேச முயற்சி செய்தபோது ஏற்பட்ட சிறிய குழப்பம் இது. ஆனால், பிரதமர் மோடியே இதைக் கூறியது போல தாக்கரே சகோதரர்கள் அரசியல் செய்கின்றனர். பம்பாய் என்ற பெயரை ‘மும்பை’ என மாற்ற முக்கியக் காரணமாக இருந்தவர் பா.ஜனதாவைச் சேர்ந்த ராம்நாயக் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.” மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில், மும்பையின் அடையாளம் குறித்த இந்த விவாதம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
