தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) தாங்கள் வெளியேறவில்லை எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி மாற்றங்கள் குறித்த யூகங்களுக்குப் பதிலளித்தார்.

அதாவது திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்த கருத்தை ராமதாஸ் நேரடியாக மறுக்கவில்லை.
இருப்பினும், தற்போதைய சூழலில் எந்த ஒரு இறுதி முடிவையும் எடுக்க முடியாது என அவர் சூசகமாகப் பதிலளித்துள்ளார். அன்புமணியைப் போலவே ராமதாஸும் தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

அதாவது தற்போது பாமக இரு தரப்புகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணி சமீபத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவதாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் பாமகவில் என்னுடைய அனுமதி இல்லாமல் கூட்டணி குறித்து அறிவிப்பை விடுத்தது சட்டவிரோதம் என ராமதாஸ் கூறிய நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார். மேலும் இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்னும் தாங்கள் விலகவில்லை என ராமதாஸ் கூறியது ராமதாஸ் தரப்பும் அதே கூட்டணியில் இணையலாம் என்று வியூகங்களை ஏற்படுத்தியுள்ளது.