திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் குடியிருப்புப் பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே புதர் பகுதியில் கடுமையான காயங்களுடன் மயங்கிக் கிடந்த அச்சிறுமியைக் காவல்துறையினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சி (19) என்ற வாலிபரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும், இக்கொடூரச் செயலில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், தப்பியோடிய பிற குற்றவாளிகளைக் கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.