“கடந்த ஆட்சியில் போராடுன ஆசிரியர்கள் மேல போட்ட கேஸ் எல்லாத்தையும் இந்த அரசு மொத்தமா வாபஸ் வாங்குகிறது!” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளிக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் காலிப்பணியிடங்களையும் மிக விரைவில் நிரப்ப போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விபரங்களைத் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும் என்றும், பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்த அமைச்சர், பள்ளிகளுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடவோ அல்லது இடமாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், குற்றங்களின் தாய்மடியே போதைப்பொருள் தான் எனக் குறிப்பிட்டு, ‘போதை இல்லா தமிழகம்‘ உருவாக்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்றும், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 1,238 குற்றவாளிகளைத் தமிழக அரசு அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.