தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் நிலவும் சிக்கல்கள் தீர வேண்டி, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா மதன். சிறு வயது முதலே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான இவர், தனது வலது கையில் விஜய்யின் உருவத்தை ‘டாட்டூ’ குத்தியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக (தமிழக வெற்றிக் கழகம்) மாறிய பிறகு, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணியில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தொடர் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வேதனையடைந்த ஐஸ்வர்யா, இப்படம் தடையின்றி நல்லபடியாக வெளியாக வேண்டும் என்று அனகாபுத்தூரில் உள்ள அயோத்தி அம்மன் கோவிலில் வேண்டிக் கொண்டார். அதன் ஒரு பகுதியாக, நேற்று கோவிலுக்குச் சென்ற அவர் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்து அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தினார்.
View this post on Instagram
இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், “திரைப்படங்களில் புரட்சி செய்ய வருபவர்களுக்கு வில்லன்கள் முட்டுக்கட்டை போடுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், விஜய்யின் விஷயத்தில் ஆளுங்கட்சியினர் அதனை நிஜத்திலேயே செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ தடைகள் வந்தாலும் ‘ஜனநாயகன்’ படம் நிச்சயம் வெளியாகும். அதற்காக எந்த எல்லைக்குச் செல்லவும் நான் தயாராக இருக்கிறேன்,” என உருக்கமாகத் தெரிவித்தார். விஜய் மீதான ரசிகையின் இந்தப் பாசம் மற்றும் அரசியல் ரீதியான இந்தச் செயல் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
